ரத்தம் வழிந்த நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த வியாபாரி போலீசார் விசாரணை


ரத்தம் வழிந்த நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த வியாபாரி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 9:19 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்த வியாபாரி, உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். வியாபாரி மர்மசாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பெருவிளை ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 51). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் சந்தையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி வினோதா (44). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வினோதா மார்த்தாண்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் சுரேஷ் மட்டும் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களாக வினோதா சுரேசின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பூட்டிய வீட்டுக்குள் பிணம்

சந்தேகம் அடைந்த வினோதா வீட்டின் அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தனது கணவரை செல்போன் மூலமாக பேசச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதையடுத்து அக்கம், பக்கத்தினர் சுரேசின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தபோது பேண்ட் சட்டை அணிந்திருந்த சுரேஷ் கீழே விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

உடனே இதுகுறித்து வினோதாவுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மார்த்தாண்டத்தில் இருந்து உறவினர்களுடன் நாகர்கோவில் வந்தார். இதற்கிடையே ஆசாரிபள்ளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெரால்டின் வினோ மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது, சுரேஷ் உடல் அழுகி, ரத்தம்வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் சுரேசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். பூட்டிய வீட்டுக்குள் வியாபாரி மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story