எண்ணூர் துறைமுகம் அருகே நிர்வாண நிலையில் கடலில் நீந்தி வந்த வாலிபரால் பரபரப்பு


எண்ணூர் துறைமுகம் அருகே நிர்வாண நிலையில் கடலில் நீந்தி வந்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 5:00 AM IST (Updated: 14 Jun 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள நடுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை ஒரு பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் துறைமுகம் அருகே 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கடலில் தத்தளித்தபடி நீந்திக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த வாலிபர் பேசிய மொழி மீனவர்களுக்கு புரியவில்லை. இதனால் அவரை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உளவு பார்க்க வந்தாரா?

போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக்மொய்தீன் என்றும், அலி முகம்மது இப்ராகிம் என்றும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

தாங்கள் 22 பேர் ஒரு விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதில் 4 பேர் கடலில் தவறி விழுந்து விட்டதாகவும், 3 பேர் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை எனவும், தான் மட்டும் நீந்தி வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

ஆனாலும் அவர் பேசிய மொழி சரியாக புரியாததால் போலீசாரால் அவரிடம் தொடர்ந்து தகவலை பெற முடியவில்லை. அவர் எண்ணூர் துறைமுகத்தை உளவு பார்க்க வந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவரா?

அந்த வாலிபர் உடன் வந்த 22 பேர் குறித்தும் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய ஒருவர் கடலில் நீந்தி வந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

அந்த வாலிபர் யார்? எங்கு இருந்து வந்தார்? அவர் உண்மையிலே மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story