கவர்னர் ஆய்வு செய்தால் பதில் வருகிறது: அரசின் செயல்பாடு குறைவாக உள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள்


கவர்னர் ஆய்வு செய்தால் பதில் வருகிறது: அரசின் செயல்பாடு குறைவாக உள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:33 AM IST (Updated: 14 Jun 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆய்வு செய்தால் பதில் வருகிறது: அரசின் செயல்பாடு குறைவாக உள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு வருத்தம்

புதுச்சேரி

தனியார் தொழிற்சாலைகளில் கவர்னர் ஆய்வு செய்யும்போது நிர்வாக தரப்பில் இருந்து உரிய பதில் வருவதாகவும், அரசின் செயல்பாடு குறைவாக உள்ளதாகவும் மக்கள் நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு வருத்தத்துடன் தெரிவித்தார்.

புதுவை சட்டசபையில் நடந்த விவாதம் வருமாறு:–

நச்சுக்கழிவு

தீப்பாய்ந்தான்: ஊசுடு தொகுதி துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் இரும்பு தொழிற்சாலை, சோப்பு உற்பத்தி தொழிற்சாலை, சேதராப்பட்டில் இயங்கும் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க துறை எடுத்த நடவடிக்கை என்ன?

அமைச்சர் கந்தசாமி: இந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு குழு அனுமதியளிக்கும்போது காற்று மாசு மற்றும் கழிவுநீரின் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தில் தேவையான மாசுக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தொழிற்சாலைகள் இயங்குகின்றனவா என்பதை மாசு கட்டுப்பாட்டு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தொழிற்சாலைகளை மூடலாம்

தனவேலு (காங்): எனது தொகுதியிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அமைச்சருக்கு கடிதமும் கொடுத்தேன். நிறைய தொழிற்சாலைகள் தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுக்கின்றன. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் ஆய்வு செய்யவேண்டும்.

அமைச்சர் கந்தசாமி: நான் ஒரு கம்பெனியில் ஆய்வு செய்தது தொடர்பாக சில பத்திரிகைகளில் தப்பு தப்பாக எழுதினார்கள். எனவே ஓய்வுபெற்ற நேர்மையான அதிகாரி தலைமையில் குழு போட்டு ஆய்வு செய்யலாம். மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடலாம். வெளிமாநிலத்தில் தடை செய்யப்பட்ட கம்பெனிகள் பல இங்குள்ளன.

அரசின் செயல்பாடு குறைவு

தனவேலு: ஒரு கம்பெனியில் அதிக சத்தம் வருவதாக நான் புகார் தெரிவித்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் நேரடியாக கவர்னரிடம் புகார் தெரிவித்தனர். கவர்னர் நேரடியாக சென்று அங்கு ஆய்வு செய்கிறார். அவரிடம் கம்பெனி நிர்வாகமும் உரிய பதிலை தருகிறது. இன்னும் 2 மாதத்தில் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக கவர்னரிடம் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். நமது அரசின் செயல்பாடு குறைவாக உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்வார். மேலும் சட்டமன்ற குழுக்களும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தலாம். ஏற்கனவே நாம் கவர்னர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் கூறி வருகிறோம். கவர்னர் நேரடியாக சென்று ஆய்வு நடத்த சட்டத்தில் இடமில்லை.

தனவேலு: அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தீப்பாய்ந்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு நடத்தவும் உத்தரவு கொடுக்கவேண்டும்.

தனவேலு: நாங்கள் சென்று ஆய்வு நடத்த அனுமதி கொடுங்கள்.

பொதுக்கணக்கு குழு

அமைச்சர் கந்தசாமி: நான் ஆய்வு நடத்த சென்றாலே அதை பிரச்சினையாக்கி விடுகிறார்கள். அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு செய்யலாம்.

நாராயணசாமி: எம்.எல்.ஏ.வுக்கு என்று சில அதிகாரம் உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் தவறுகள் தொடர்பாக அமைச்சரிடம் புகார் அளிக்கலாம். அவர் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்வார்.

அமைச்சர் கமலக்கண்ணன்: கடந்த காலங்களில் இதுதொடர்பான புகார்கள் வந்தபோது பொதுக்கணக்குக்குழு, மதிப்பீட்டு குழு போன்றவை சென்று ஆய்வு செய்தன.

சபாநாயகர்: இந்த குழுக்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story