அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்ததாக கூறி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்ததாக கூறி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியின் 9–வது வார்டு பகுதிகளான மேற்கு கோவிந்தாபுரம், சொசைட்டி தெரு, லட்சுமணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீர் கலங்கலாக வந்ததோடு, பச்சை நிறத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தி.மு.க. நகர செயலாளர் ராஜப்பா தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் 9–வது வார்டு பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பாட்டிலில் கொண்டு வந்திருந்தனர். அதை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்யாததால், அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அந்த குடிநீரை குடித்த ஒருசிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.