மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:00 AM IST (Updated: 15 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 707 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

தமிழக சட்டசபை கூட்டத்தின் போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் நகர செயலாளர் ராஜப்பா தலைமையில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஏ.எம்.சி. சாலையில் தி.மு.க.வினர் மறியலில் செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாடிக்கொம்பு

இதையடுத்து தாடிக்கொம்பு, அகரம் பேரூர் கழகம் சார்பில் திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதில் தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. செயலாளர் நாகப்பன், அகரம் பேரூர் செயலாளர் ஜெயபால் உள்பட நிர்வாகிகள் 50 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

வடமதுரையில் ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன் தலைமையில் தி.மு.க.வினர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் மறியலில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதேபோல் அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே நகர செயலாளர் கருப்பன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

வத்தலக்குண்டு

இதுதவிர வத்தலக்குண்டுவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். வேடசந்தூரில் ஆத்துமேட்டில் திண்டுக்கல்– கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் தலைமையில் மறியல் நடந்தது. நகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க.வினர் 40 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.

பழனி பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் தமிழ்மணி, முன்னாள் நகர்மன்ற தலைவர் வேலுமணி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். எரியோட்டில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜீவா தலைமையில் மறியல் நடந்தது. ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன் முன்னிலை வகித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 41 பேரை எரியோடு போலீசார் கைது செய்தனர்.

707 பேர் கைது

அதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் முகமது இபுராகிம் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் நகர பொருளாளர் முகமது யூசூப், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் செல்லத்துரை, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் குஜிலியம்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாளையம் பேரூர் செயலாளர் சம்பத் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் பஸ்நிலையம் அருகில் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 54 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 707 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story