காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கழுக்குன்றம்,
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தி.மு.க., அ.தி.மு.க. வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு..க எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதை கண்டித்து அவர்கள் தலைமைச் செயலகம் எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமையில் நகர செயலாளர் யுவராஜ், கோபால் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்துவந்து மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
மாமல்லபுரம்திருப்போரூர் ஒன்றியத்தில் நகர தி.மு.க. சார்பில் திருப்போரூர் தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் தலைமையில் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்போரூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தார்.
மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே நேற்று மாலை காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 70 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம்காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், பேரூர் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 75–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் டி.வி. கோகுலக்கண்ணன் தலைமையில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தம்பு மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றிய நகர தி.மு.க.வினர் 100–க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸபெக்டர் தமிழ்வாணன் கைது செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே திருத்தணி நகர தி.மு.க. செயலாளர் பூபதி தலைமையில் 80–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கண்டன ஊர்வலம் நடத்தி சாலை மறியல் செய்தார்கள். இதை அறிந்த திருத்தணி போலீசார் உடனே அங்கு வந்து அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து தி.மு.க.வினர் நேற்று மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.