மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சென்னை புறநகர் பகுதியில் தி.முக.வினர் சாலை மறியல்–கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் வடக்கு, தெற்கு பகுதி தி.மு.க. சார்பில், பகுதி செயலாளர்கள் துக்காராம், பரந்தாமன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 50–க்கும் மேற்பட்டவர்கள் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
செங்குன்றம்செங்குன்றம் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் செங்குன்றம் பஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சோழவரம் ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் பாடியநல்லூர் சிக்னல் அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்பெரம்பூர் தொகுதி தி.மு.க.வினர் தொகுதி செயலாளர்கள் முருகன், ஜெயராமன் தலைமையில் 30 பெண்கள் உள்பட 150 பேர் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அம்பேத்கர் கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கொளத்தூர் தொகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் நாகராஜ், ஐ.சி.எப். முரளிதரன் ஆகியோர் தலைமையில் 40 பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் பெரம்பூர் பேப்பர்மில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெரவள்ளுர் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தாம்பரம்தாம்பரம் பஸ் நிலையம் அருகே நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ் தலைமையிலும், குரோம்பேட்டை சிக்னல் அருகே குரோம்பேட்டை காமராஜ் தலைமையிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரோம்பேட்டை வைஷ்ணவி கல்லூரி ரெயில்வே கேட் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் ஜோசப் அண்ணாதுரை தலைமையிலும், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
திருவொற்றியூர்திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க.வினர் பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் விம்கோ நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவைத்தலைவர் ராமநாதன், ஆதிகுருசாமி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து எர்ணாவூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடப்பதால் கைதான தி.மு.க.வினரை தங்க வைக்க இடம் இல்லை. இதனால் கைதான பெண்கள் உள்பட அனைவரையும் மணலி விரைவு சாலையில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ராஜா சண்முகபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் தேரடியில் பகுதி செயலாளர் தணியரசு தலைமையில் சாலை மறியல் செய்த பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணலியில் மாவட்ட அவைத்தலைவர் துரை தலைமையில் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஏ.வி.ஆறுமுகம் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடிஆவடியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் 300–க்கும் மேற்பட்டோர் ஆவடி புதிய ராணுவ சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை விடுதலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல் சாலை மறியலில் ஈடுபட்டதாக அம்பத்தூர் பகுதியில் 52 தி.மு.க.வினரும், கொரட்டூர் பகுதியில் 53 பேரும், திருநின்றவூரில் 25 பேரும் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டையார்பேட்டைதண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் அருகே பகுதி செயலாளர் என்.மருதுகணேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.கே.நகர் எண்ணூர் நெடுஞ்சாலையில் பகுதி செயலாளர் ஏ.டி.மணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆலந்தூர்நங்கநல்லூரில் தி.மு.க. பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமையில் ஜெகதீசன், இப்ராகீம் உள்பட 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ஆலந்தூரில் முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் தலைமையில் 15 பேர் கத்திப்பாராவில் சாலை மறியலில் ஈடுபட வந்தபோது கைதானார்கள்.
ஈஞ்சம்பாக்கத்தில் பகுதி செயலாளர் மதியழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.