பெண்ணை கற்பழித்த ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் கைது


பெண்ணை கற்பழித்த ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 4:59 AM IST (Updated: 15 Jun 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

காரில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி மைனர் பெண்ணை காரில் அழைத்துச் சென்று கற்பழித்த ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

உப்பள்ளியில், காரில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி மைனர் பெண்ணை காரில் அழைத்துச் சென்று தனியார் தங்கும் விடுதியில் வைத்து கற்பழித்த ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மைனர் பெண்

பெலகாவி மாவட்டம் மாடலகி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது நிறைந்த மைனர் பெண் கடந்த மாதம்(மே) 5–ந் தேதி உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மங்களூரு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு காரில் வந்த தார்வார் டவுன் பகுதியைச் சேர்ந்த முகமது சாப் என்கிற முகமது ஆசிப் சையது(வயது 38), அந்த மைனர் பெண்ணிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார்.

பின்னர் அவர் தானும் மங்களூரு செல்வதாகவும், தான் லிப்ட் கொடுப்பதாகவும், தன்னுடன் வந்தால் காரில் அழைத்துச் சென்று மங்களூருவில் விட்டுவிடுவதாகவும் கூறினார். அவர் கூறியதை நம்பிய அந்த மைனர் பெண், சையதுவின் காரில் ஏறினார்.

கற்பழிப்பு

இதையடுத்து சையது அந்த மைனர் பெண்ணை உப்பள்ளியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு உணவு வாங்கிக் கொடுத்த சையது, பின்னர் அப்பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் சையது அந்த மைனர் பெண்ணை கற்பழிப்பதற்கு அவருடைய நண்பர் சோகலத் முகமது ஆசிப் என்பவர் உடந்தையாக இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சையது, ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், அவர்தான் அந்த மைனர் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று கற்பழித்ததும், அதற்கு அவருடைய நண்பர் சோகலத் முகமது உடந்தையாக இருந்ததும் உறுதியானது.

கைது

இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த சையதுவையும், அவருடைய நண்பர் சோகலத் முகமதுவையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story