கர்நாடகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது
கர்நாடகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டதாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டதாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டினார்.
நிவாரண நிதி வழங்குவதாக...கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 8–வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரத்தை தொடர்ந்து, பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டு பேசியதாவது:–
பெங்களூருவில் கடந்த மே மாதம் 20–ந் தேதி பலத்த மழை பெய்தது. அப்போது சாந்தக்குமார் என்பவர் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி சில நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. அவரை கண்டுபிடிக்க முடியாததால், அவர் இறந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்குவதாகவும் பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது. இதை வாங்க சாந்தக்குமாரின் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை.
உண்மையான பயனாளிகளுக்கு...அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடுகளால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மழைநீரில் அடித்து செல்லப்பட்ட சாந்தக்குமாரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது சரியல்ல. வீட்டு வசதித்துறை சார்பில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டி கொடுக்கப்படுவதாக இந்த அரசு சொல்கிறது. கிராம சபை கூட்டங்கள் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதாக அரசு சொல்கிறது. இது ஒரு நாடகம் ஆகும்.
கிராம சபை மூலம் தேர்ந்து எடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலில் பெயர்கள் மாற்றி விடுகிறார்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். வட கர்நாடகத்தில் குந்துகோல் தாலுகாவில் ஒருவர் என்னிடம் வந்து, வீட்டு வசதி திட்டத்தில் வீடு வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டார். பணம் கொடுத்தும் வீடு ஒதுக்கவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். உண்மையான பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. இதன் மீது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட துறை மந்திரி இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.
மாமூல் கலாசாரம் பெருகிவிட்டதுவனத்துறை சார்பில் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அந்த துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் அடிக்கடி சொல்கிறார்கள். காடுகளில் நடப்படும் மரக்கன்றுகள் எங்கே போகிறது? என்று சித்தராமையாவே ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கேள்வி எழுப்பினார். கர்நாடகத்தில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் காடுகளில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கர்நாடகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது. மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. மணல் விலை உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை–நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மணல் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. மாநில அரசின் அனைத்து துறையிலும் மாமூல் கலாசாரம் பெருகிவிட்டது.
பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்மணல் கடத்தலில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மணல் கடத்தலை தடுக்க முயற்சி செய்யும் நேர்மையான அரசு அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உண்மையிலேயே சரியாக பணியாற்றுகிறார்களா?. மணல் வியாபாரத்தை முறைப்படுத்த அரசுக்கு ஆர்வம் இல்லை. ஏனென்றால் மாமூல் தான் இதற்கு காரணம்.
வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்துவிட்டது. வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. முதல்–மந்திரி உள்பட மந்திரிகள் அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை நடத்த வேண்டும். அப்போது அவர்களுக்கு லஞ்சம் வாங்குவது தெரியும். வீடுகள், வீட்டுமனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் ரியல் எஸ்டேட் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் அந்த சட்டத்தை கர்நாடக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை.
ராணுவ அதிகாரி நிரஞ்சன்சில மந்திரிகளின் சுயநலத்திற்காக இந்த சட்டத்தை இன்னும் அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில், நாட்டிலேயே கர்நாடகம் ஊழலில் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இது கர்நாடகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை ராணுவ அதிகாரி நிரஞ்சன், பதான்கோட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். நகரில் ஒரு முக்கிய சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அரசு அறிவித்தது.
தொட்டபொம்மசந்திராவில் உள்ள ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்ட பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கடிதம் எழுதியதை தொடர்ந்து அந்த முடிவை மாற்றிவிட்டனர். இது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நிரஞ்சனுக்கு செய்த பெரிய அவமானம் ஆகும்.
நிதி நிலையை பாதிக்கும்நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அதிக கடன் வாங்கியதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். ஆனால் இப்போது அவர் கர்நாடகத்தின் கடன் சுமையை ரூ.2.42 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளார். கர்நாடகத்தில் இதற்கு முன்பு வேறு எந்த முதல்–மந்திரியும் இவர் அளவுக்கு கடன் வாங்கியது இல்லை. மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் சராசரியாக சுமார் ரூ.35 ஆயிரம் கடன் உள்ளது.
இந்த அரசுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கடன் சுமை அதிகரிக்க, அதிகரிக்க அது நிதி நிலையை பாதிக்கும். விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி குறைந்துவிட்டது. வேலை வாய்ப்பு பெருகவில்லை. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 2,600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர்கர்நாடகத்தில் பெங்களூரு நகரம் மட்டுமே வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் பிற நகரங்கள் வளர்ச்சி அடையவில்லை. தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதுபோன்ற நிலை கர்நாடகத்தில் இல்லை. பெங்களூருவை தொடர்ந்து மற்ற நகரங்களின் வளர்ச்சிக்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.