2 மகள்களுடன் தொழிலாளி தற்கொலை: மாயமான மனைவி போலீஸ் நிலையத்தில் ஆஜர்


2 மகள்களுடன் தொழிலாளி தற்கொலை: மாயமான மனைவி போலீஸ் நிலையத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:30 AM IST (Updated: 16 Jun 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

மணலியில் 2 மகள்களுடன் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில், மாயமான அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரை பெற்றோர் ஏற்க மறுத்ததால் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் 12–வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 38). தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ஆஷா(30) ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர்களின் மகள்கள் கவிதாலயா (13), காவியபிரியா (8).

ஆஷா வேலைக்கு செல்லக் கூடாது என்று சங்கர் தடுத்ததால் கடந்த 12–ந்தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஆஷா வேலைக்கு சென்றதும் சங்கர், தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் ஆஷா வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை.

மாயமான மனைவி திரும்பினார்

ஆஷாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் 3 பேரின் உடல்களையும் மறுநாள் உறவினர்களே எரித்துவிட்டனர். இந்த சம்பவம் பற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கணவர், மகள்கள் தற்கொலை செய்த தகவல் அறிந்து திரும்பி வந்த ஆஷா, மாதவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தார். அவரை மணலி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், கடன் தொல்லை, கணவருடன் தகராறு காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றுவிட்டு பஸ்சில் ஏறியதாகவும், விழித்து பார்த்தபோது கோவையில் இருந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

காப்பகத்தில் ஒப்படைப்பு

இதையடுத்து ஆஷாவின் தந்தை எழிலன், தாயார் சாந்தி, தம்பி சுபாஷ் மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். ஆஷாவின் பெற்றோர், தங்கள் மருமகன் மற்றும் பேத்திகள் சாவுக்கு காரணமான ஆஷாவை ஏற்க மறுத்து விட்டனர்.

கணவர் மற்றும் மகள்கள் இறந்த நிலையில், பெற்றோரும் கைவிட்டதால் அவர் விபரீத முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆஷாவை சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story