மதுபானக்கடைகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் பதாகையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு


மதுபானக்கடைகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் பதாகையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-16T02:23:20+05:30)

2 மதுபானக்கடைகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சென்று பதாகையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் அருகே உள்ள பாலம்மாள்புரத்தில் 2 மதுபானக்கடைகள் உள்ளன. இதில் ஒரு கடை பாலம்மாள்புரத்திலும், மற்றொரு கடை வாங்கல் சாலையிலும் உள்ளது. இந்த கடைகளில் மதுவாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் அந்த வழியாக செல்லும் பெண்களையும், மாணவிகளையும் கிண்டல்செய்கின்றனர். மேலும் மது குடித்துவிட்டு அவர்களுக்குள் தகராறு செய்துகொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கின்றனர். தகாத வார்த்தைகளால் பேசிக்கொள்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் பள்ளி மாணவ– மாணவிகள் இந்த மதுபானக்கடைகளை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

முற்றுகை

எனவே சம்பந்தப்பட்ட இந்த 2 மதுபானக்கடைகளையும் மூடவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நேற்று தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சென்று முதலில் பாலம்மாள்புரத்தில் உள்ள மதுபானக்கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து கடையை பொதுமக்கள் சேதப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் மதுபான விற்பனையாளர் கடையை உடனே மூடிவிட்டார். அப்போது பொதுமக்கள் மதுபானக்கடைக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வாங்கல் சாலையில் உள்ள மதுபானக்கடைக்கு தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சென்றனர். அங்கு மதுபானக்கடை முன்பு இருந்து பதாகையை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து அந்த பதாகையை பெண்கள் காலில் போட்டு மிதித்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதனால் அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் மதுபானக்கடையை உடனே மூடிவிட்டு, வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story