கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை


கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2017 4:30 AM IST (Updated: 16 Jun 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் கடலில் மீன்பிடி வலையில் ஆண் பிணம் சிக்கியது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் குளச்சல் உள்ளிட்ட மேற்கு கடல் பகுதியில் தற்போது விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் சென்று  மீனவர்கள்  மீன்பிடித்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு குளச்சல் லியோன் நகரை சேர்ந்த ஜோரீஸ் ஸ்டெல்லா என்ற ஜெனிஸ்டன் (வயது 36) தனது கட்டுமரத்தில், சைமன் நகரை சேர்ந்த ஆன்டனி (36), சகாயராஜ் (45) ஆகியோருடன் மீன் பிடிக்க சென்றார்.

இவர்கள் கடலில் வலையை விரித்து விட்டு கரைக்கு வந்து விட்டனர். பின்னர், நேற்று அதிகாலையில் அவர்கள் வலையை எடுக்க சென்றனர்.

ஆண் பிணம்

வலையை எடுத்து அதில் ஏதாவது மீன்கள் சிக்கியுள்ளதா? என பார்த்தபோது, அதில் ஒரு ஆண் பிணம் சிக்கியிருந்தது. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அத்துடன், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். சிவப்பு நிற ‘டவுசர்’ அணிந்திருந்தார். கையில் தாயத்து கட்டப்பட்டு இருந்தது. அந்த நபர் ஓரிரு நாளில்தான் இறந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.

யார் அவர்?

அவர் உள்ளூர் நபராக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story