சேலத்தில் ஒரே மாணவி படிக்கும் மாநகராட்சி பள்ளி 2 ஆசிரியைகள் பாடம் நடத்துகிறார்கள்
சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் ஒரே மாணவிக்கு 2 ஆசிரியைகள் பாடம் நடத்துகிறார்கள்.
சேலம்,
தமிழகத்தில் மற்ற துறைகளை காட்டிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளியிலும் ஆங்கில வழிக்கல்வி அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை பல்வேறு புதுவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 7–ந் தேதி அனைத்து பள்ளிகள் திறந்தபோது, சேலம் மாநகரில் உள்ள அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவ–மாணவிகளை அந்தந்த பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாலை அணிவித்தும், பூக்களை கொடுத்தும் உற்சாகமாக வரவேற்ற நிகழ்வு ஆங்காங்கே நடந்தது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தன.
ஒரு மாணவி படிக்கும் அவலம்இது ஒருபுறம் இருக்க, சேலம் அரிசிபாளையம் பெருமாள் தெருவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க அப்பகுதி பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது படித்து வருகிறார். அந்த மாணவிக்கு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை மற்றும் மற்றொரு ஆசிரியை என 2 பேர் பாடம் நடத்தி வருகின்றனர்.
1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் குறைவான எண்ணிக்கையில் மாணவ–மாணவிகளே படித்து வந்தனர். ஆனால் பள்ளியில் மின்சார வசதி கிடையாது. சுகாதார வளாகம் இல்லை. இதனால் அரிசிபாளையம் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ–மாணவிகளை சேர்க்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. இந்த பள்ளியில் படித்த மாணவ–மாணவிகளையும் அவர்களது பெற்றோர்கள் அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.
பொதுமக்கள் புகார்இதன் காரணமாக தற்போது ஒரே ஒரு மாணவி மட்டும் 3–ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியையும், மற்றொரு ஆசிரியையும் தினமும் பள்ளிக்கு வந்த அந்த மாணவிக்கு பாடம் எடுக்கிறார்கள். அதுவும் அந்த மாணவி ஒருநாள் விடுமுறை எடுத்துவிட்டால் இரண்டு ஆசிரியைகளும் பாடம் நடத்தாமல் வேலை இன்றி இருக்கும் அவலநிலை உள்ளது. அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஆசிரியைகள் ஆர்வம் காட்டுவது கிடையாது என்றும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
கல்வித்துறை அதிகாரிகள் இந்த பள்ளியை ஆய்வு செய்திருந்தால், எத்தனை பேர் படிக்கிறார்கள்? மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த என்ன வழி? என்பது பற்றி தெரியவந்திருக்கும். ஆனால் யாரும் ஆய்வு செய்யவரவில்லை. எனவே, இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி தொடர்ந்து இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பள்ளியை மூடிவிட்டு அந்த மாணவியை வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு 2 ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிபுரிய இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அடிப்படை வசதி இல்லைஇதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகளிடம் கேட்டபோது, எங்களது பள்ளியில் மாணவர் சேர்க்கை பற்றி அரிசிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பெற்றோர்களை அணுகினோம். ஆனால் யாரும் தங்களது குழந்தைகளை அனுப்பவில்லை. பள்ளியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இந்த வருடம் ஒரே ஒரு மாணவி மட்டும் 1–ம் வகுப்பில் சேர்ந்தாள். அவளும் இதுவரை பள்ளிக்கு வரவில்லை. வழக்கம்போல் நாங்கள் பள்ளிக்கு வந்து செல்கிறோம். இருப்பினும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் வேறு ஒரு பள்ளியுடன் இந்த பள்ளியை சேர்க்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், என்றனர்.