மனுநீதி நாள் முகாம் 223 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட உதவி
கபிலர்மலை அருகே நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 223 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஆனங்கூர் ஊராட்சி பாண்டமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஆனங்கூர், அக்ரஹார குன்னத்தூர் மற்றும் மிட்டா குன்னத்தூர் ஆகிய கிராமமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் ஆனங்கூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர், “தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று பயனடைந்து தங்களின் வாழ்க்கைத் தரத்தினையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும்“ என கேட்டுக்கொண்டார்.
ரூ.12 லட்சத்தில்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் கபிலர்மலை வட்டாரம் ஆனங்கூர் மற்றும் பாகம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் பயின்றுவரும் 13 குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ்களையும், வருவாய்த்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் விபத்து மரண நிவாரண நிதியுதவி, வேளாண்மைத்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.25,810 மானியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 420 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் என இந்த முகாமில் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து ஆயிரத்து 230 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த முகாமில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் (பொறுப்பு) மற்றும் உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி வரவேற்றார். தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், இணை இயக்குனர் (வேளாண்மை, பொறுப்பு) சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பேசினர். முடிவில் பரமத்தி வேலூர் வருவாய் தாசில்தார் விஜயலட்சுமி நன்றி கூறினார்.