தனியார் கம்பெனியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
கடலூர் முதுநகர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் கூறினர்.
கடலூர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் கிராம மக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன் தலைமையில் கலெக்டர் ராஜேஷிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
துர்நாற்றம் வீசுகிறதுஎங்களது கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். கிராமத்தின் அருகே சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் இறால் மீனை காயவைத்து பவுடர் மற்றும் எண்ணெய் தயாரித்து வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள்.
இறால் மீன்களை காயவைப்பதாலும், அரைப்பதாலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது கிராமம் முழுவதும் பரவுவதால், துர்நாற்றத்தை தாங்க முடியாமல் வீடுகளின் கதவு, ஜன்னல்களை அடைத்து வைத்தபடி தான் வசிக்க வேண்டிய நிலை உள்ளது.
தடுத்து நிறுத்த வேண்டும்துர்நாற்றம் தாங்க முடியாமல் சிலருக்கு வாந்தி ஏற்படுகிறது. வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. இதனால் நோய் தாக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால் நாங்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் பலன் இல்லை.
எனவே தனியார் கம்பெனியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.