முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய மாணவர் சங்கத்தினர் 24 பேர் கைது
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை, எளிய மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும், அங்கீகாரம் இல்லாத சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் பள்ளி– கல்லூரிகளில் நடந்து வரும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதையொட்டி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பும், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வீமராஜ், சுருளிராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய மாணவர் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டு சென்றனர்
24 பேர் கைதுஇதில் வடக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீபத், செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 24 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.