அரசு சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு நடந்துள்ளது சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ. புகார்
புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்தில் பஸ் ரூட் வழங்கியது, பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா எழுப்பிய கேள்வியை தொடர்ந்த நடந்த விவாதம் வருமாறு:–
விசாரணை அறிக்கைசிவா: புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா?
அமைச்சர் ஷாஜகான்: வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவா: கடந்த ஒரு வருடமாக என்ன செய்தீர்கள்?
அமைச்சர் ஷாஜகான்: விசாரணை நடந்து அறிக்கை தயாராகி வருகிறது.
சிவா: இந்த கழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. பொருட்கள் வாங்கியது, தனியாருக்கு சாதகமாக நேரங்களை மாற்றியது, தனியாருக்கு பஸ்ரூட் வழங்கியது என பல உள்ளது.
நடவடிக்கை எடுப்போம்அமைச்சர் ஷாஜகான்: உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுங்கள். அதுகுறித்தும் விசாரிக்க சொல்லலாம். தவறு நடந்திருந்தால் அதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: ஆதாரங்கள் இருந்தால் தொழிலாளர்களும் தரலாம். இதுகுறித்து சாலைப்போக்குவரத்து கழக நோட்டீசு போர்டில் போடுங்கள். அதேபோல் ரோடியர் மில்லிலும் செய்யலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.