மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பயிற்சி


மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பயிற்சி
x
தினத்தந்தி 16 Jun 2017 12:20 AM GMT (Updated: 2017-06-16T05:50:43+05:30)

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற, இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பயிற்சியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற, இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பயிற்சியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

ஒரே மாதிரியான அடையாள அட்டை

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வொர்த் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடந்தது. இந்தப் பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மத்திய அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை ஒரே மாதிரியாக பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இதற்கென உள்ள படிவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், தபால் வில்லை அளவு புகைப்படம் ஒன்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, ரத்த பிரிவு, சாதி சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளியின் கையெப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை ஆகியவற்றை படிவத்துடன் இணைந்து இணைய சேவை மையத்தில் பதிவு செய்திட வேண்டும்.

100 சதவீதம்..

ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து இதுவரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 2 ஆயிரத்து 787 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு மிகவும் குறைவாக உள்ள காரணத்தால், தற்போது மாவட்டத்தில் உள்ள பிற துறைகளுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு www.swavlambancard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்திட ஏதுவாக இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் 100 சதவீதம் பதிவு செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மகளிர் திட்ட உதவி அலுவலர் விஜயகுமாரி மற்றும் மகளிர் திட்ட வட்டார களப்பணியாளர்கள், இ–சேவை மைய கணினி பணியாளர்கள், புதுவாழ்வு திட்டத்தின் களப்பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.Next Story