இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Jun 2025 8:18 PM IST
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Jun 2025 7:24 PM IST
குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்து போல் ஏற்பட்டால், உடனடியாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) இன்று நடைபெற்றது. விமானம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி உருவம் தீப்பிடித்தவுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அதனை அணைத்து, பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுபோல ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதுவொரு ஒத்திகை நிகழ்ச்சியாக இருந்தாலும், திடீரென பார்த்தவர்களுக்கு ஏதோ விமானம் தீப்பிடித்து எரிந்துவிட்டதோ? என்று எண்ண தோன்றியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- 28 Jun 2025 6:38 PM IST
டி.என்.பி.எல். போட்டி தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று கடைசி சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து மதுரை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. தாமதம் காரணமாக ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 41 ரன்களும், முருகன் அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 31 ரன்களில் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
சேப்பாக் அணியை பொறுத்தவரை விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும், ரோகித் மற்றும் அபிஷேக் தன்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.
- 28 Jun 2025 5:54 PM IST
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்த சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சி தலைமை உத்தரவிட்டதன் பேரில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார். இதேபோன்று, புதுச்சேரி துணை நிலை கவர்னர் கைலாசநாதனை சந்தித்து இதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளார். இதுபற்றி கவர்னர் மாளிகையில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
- 28 Jun 2025 5:32 PM IST
டி.என்.பி.எல். போட்டி தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று கடைசி சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து மதுரை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. தாமதம் காரணமாக ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
- 28 Jun 2025 5:23 PM IST
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Jun 2025 4:59 PM IST
காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை நடந்த தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
- 28 Jun 2025 4:23 PM IST
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் சட்ட கல்லூரி மாணவி கும்பல் பலாத்கார சம்பவம் பற்றி உத்தர பிரதேச பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான அபர்ணா பிஷ்த் யாதவ் கூறும்போது, இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரியாக பெண்ணான மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வருகிறார். 10 மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது என்றும் கூறியுள்ளார்.
- 28 Jun 2025 3:42 PM IST
கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டக்கூடும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால், விநாடிக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.