ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இடநெருக்கடியால் அவதிப்படுவதாக அகதிகள் குடும்பத்தினர் புகார்


ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இடநெருக்கடியால் அவதிப்படுவதாக அகதிகள் குடும்பத்தினர் புகார்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:50 AM IST (Updated: 16 Jun 2017 5:50 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டார்.

ஆரணி,

ஆரணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைகூட பகுதியில் உள்ள முகாமை சேர்ந்த அகதிகள் இடநெருக்கடியால் சிரமப்படுவதாகவும் தங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கி குடியிருப்பு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அகதிகள் முகாம்

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தின் ஒரு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இதே இடத்தில் முகாம் உள்ளது. இங்கு 98 குடும்பங்களை சேர்ந்த 331 அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கான வீடுகள் பலகைகளால் தடுத்து தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆரணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடுவதற்காக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வந்தார். அவர் முதலில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமை பார்வையிட்டு அங்குள்ள அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அகதிகள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:–

நெல்குடோன் வைக்கக்கூடிய இடத்தில் பலகைகள் மூலமாக அறைகளை ஏற்படுத்தி குடியிருப்பை உருவாக்கியுள்ளனர். நாங்கள் இங்கு வரும்போது குழந்தைகளாகத்தான் இருந்தோம். இப்போது எங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டனர். இந்த நிலையில் சிறிய இடத்தில் வசிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தர வேண்டும். தச்சூர் கிராமத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே அரசு இடம் உள்ளது. அந்த இடத்தை ஒதுக்கி குடியிருப்பு கட்ட வேண்டும்.

துர்நாற்றத்தால் அவதி

எங்கள் குடியிருப்பு அருகே நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு அடிக்கடி சிலர் தீவைத்து விட்டு சென்று விடுகின்றனர். குப்பைகள் எரிவதால் புகைமூட்டம் ஏற்பட்டு துர்நாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில், கூடுதல் இடம் ஒதுக்குவது குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கன்னிகாபுரம்

பின்னர் அவர் வேலப்பாடி மற்றும் கஸ்தம்பாடியை அடுத்த கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? அரசின் சார்பில் வழங்கப்படும் ரே‌ஷன் பொருட்கள் சரியாக கிடைக்கிறதா? அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு செல்கிறார்களா? என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது தாசில்தார் ஏ.சுப்பிரமணி (ஆரணி), புவனேஸ்வரி (போளூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிதரன், வி.சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தமிழரசி மற்றும் முகாம் தலைவர்கள் முத்துசாமி, ஜீவதயாளன் ஆகியோர் சென்றனர்.



Next Story