கீழ்நர்மா கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகை போராட்டம் எதிரொலி: நிலுவை தொகை கரும்பு விவசாயிகளுக்கு பட்டுவாடா


கீழ்நர்மா கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகை போராட்டம் எதிரொலி: நிலுவை தொகை கரும்பு விவசாயிகளுக்கு பட்டுவாடா
x
தினத்தந்தி 16 Jun 2017 10:00 PM GMT (Updated: 16 Jun 2017 6:29 PM GMT)

கீழ்நர்மா கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகை போராட்டம் எதிரொலி ரூ.37 லட்சம் நிலுவை தொகை கரும்பு விவசாயிகளுக்கு பட்டுவாடா

வந்தவாசி,

விவசாயிகளின் முற்றுகை போராட்டம் எதிரொலியாக கீழ்நர்மா கூட்டுறவு கடன் சங்க நிர்வாகம் கரும்பு நிலுவை தொகை ரூ.37 லட்சத்தை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்தது. மீதம் உள்ள தொகை இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கம்

வந்தவாசி தாலுகா கீழ்நர்மா கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் இரும்பேடு, முறுக்கேரி, விளாங்காடு, ஆரியாத்தூர், கீழ்பாக்கம், கீழ்நர்மா ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1000–க்கும் மேற்பட்டோர் கரும்பு விவசாயிகளாவர்.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இவர்களிடம் கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவை தொகையை ஆலை நிர்வாகம் வந்தவாசியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு அனுப்பியது.

இந்த வகையில் விவசாயிகளுக்கு சுமார் ரூ.70 லட்சம் வழங்கப்பட வேண்டியிருந்தது. இந்த தொகையை கீழ்நர்மா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சுமார் 150–க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் நேற்று முன்தினம் அந்த சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

சமரச பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனக்கூறி சமரசம் செய்தனர். இதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்,

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க மத்திய கூட்டுறவு வங்கி துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று வந்தவாசி மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் களமேலாளர் ப.கந்தசாமி, கள அலவலர்கள் மணி, ஏஞ்சல் ஆகியோர் முன்னிலையில் 92 கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.37 லட்சத்து 45 ஆயிரத்து 300 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழ்நர்மா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வபெருமாள், துணை தலைவர் பெருமாள், செயலாளர் ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர். மீதமுள்ள தொகை இன்று வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story