சென்னிமலை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சென்னிமலை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை,
சென்னிமலை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சியில் உள்ளது அம்மன்கோவில் புதூர், மங்களபுரம், சல்லிமேடு, வாய்க்கால்மேடு கிராமங்கள். இந்த பகுதிகளில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து மங்களபுரம் மற்றும் அம்மன் கோவில் புதூர் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 6–ந் தேதி 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டது. இதில் அம்மன்கோவில் புதூரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் மட்டும் தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் அங்கு மின் இணைப்பு கொடுக்காமல் குடிநீர் தொட்டியை மட்டும் வைத்துள்ளனர்.
மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் 2 மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். எனவே இந்த பணி கடந்த 40 நாட்களாக கிடப்பிலேயே போடப்பட்டது. அதனால் தொடர்ந்து குடிநீருக்கு சிரமப்பட்ட அம்மன்கோவில் புதூர், மங்களபுரம், சல்லிமேடு, வாய்க்கால்மேட்டை சேர்ந்த 100–க்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் நேற்று காலை 8 மணியளவில் முருங்கத்தொழுவு பிரிவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னிமலை–அறச்சலூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு உடனடியாக சென்னிமலை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
மேலும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அதிகாரி வாணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சென்னிமலை ஒன்றிய செயலாளர் எஸ்.பொன்னுசாமி, மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் ஆகியோர் பேசினார்கள். பிறகு உடனடியாக மின் கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டனர். சாலைமறியல் போராட்டத்தால் சென்னிமலை–அறச்சலூர் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.