மத்திய அரசை கண்டித்து கன்றுக்குட்டி அறுக்கும் போராட்டம் நடத்த முயற்சி


மத்திய அரசை கண்டித்து கன்றுக்குட்டி அறுக்கும் போராட்டம் நடத்த முயற்சி
x
தினத்தந்தி 17 Jun 2017 4:00 AM IST (Updated: 17 Jun 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து கன்றுக்குட்டி அறுக்கும் போராட்டம் நடத்த முயற்சி ஆதித்தமிழர் பேரவையினர் 48 பேர் கைது

தேனி,

தேனியில் மத்திய அரசை கண்டித்து கன்றுக் குட்டியை அறுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடையை எதிர்த்தும், தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகள் இந்த தடையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனியில் மாடு அறுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து தேனி நேரு சிலை, பங்களாமேடு பகுதியில் போலீசார் நேற்று காலையில் குவிக்கப்பட்டனர். பகல் 11 மணியளவில் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் இளந்தமிழன் தலைமையில் பலர் அங்கு வந்தனர். அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை கொண்டு வந்து அறுக்க முயன்றனர். இதை பார்த்ததும் போலீசார் அந்த கன்றுக்குட்டியை அறுக்க விடாமல் தடுத்தனர்.

48 பேர் கைது

இதனால் போராட்டம் நடத்த வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் இருந்து கன்றுக்குட்டியை போலீசார் மீட்டனர். இதையடுத்து ஆதித்தமிழர் பேரவையினர் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கன்றுக்குட்டி தேனி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட போது கன்றுக்குட்டியை அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story