கோத்தகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஆசாமி கைது
கோத்தகிரியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஆசாமி கைது கண்காணிப்பு கேமராவில் பார்த்து பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
கோத்தகிரி,
கோத்தகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஆசாமியை பொதுமக்கள் கண்காணிப்பு கேமராவில் பார்த்து மடக்கிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டுகோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (வயது 28). இவர் வீட்டிற்கு முன்புறம் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சொந்த வேலையாக கோவைக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து பணம், நாணயங்கள், கவரிங் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அவர், அக்கம், பக்கத்தினருடன் சேர்ந்து ஆசாமியை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.
போலீசில் ஒப்படைப்புதனது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தார். அதில் அந்த மர்ம ஆசாமி, வீட்டிற்குள் நுழைந்து திருடிவிட்டு, பக்கத்தில் உள்ள பகுதிக்கு செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து அவர், அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து, அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தேடிப்பார்த்தார். அப்போது அந்த ஆசாமி, அங்குள்ள முருகையன் என்பவரின் வீட்டருகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அந்த ஆசாமியை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த ஆசாமியை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைதுஇதனை தொடர்ந்து போலீசார் அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோத்தகிரியை சேர்ந்த ரத்னாச்சலம் என்பவரது மகன் பங்க் ராஜேந்திரன் (வயது50) என்பதும், கடந்த ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் குடியிருந்து வந்தவர் என்பதும், தற்போது கோவையில் உள்ள ஓட்டல்களில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில் நூர்முகமது வீட்டில் தங்க நகை என திருடிய அனைத்து நகைகளும் கவரிங் நகைகள் எனவும், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்க் ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பங்க் ராஜேந்திரன் மீது அருவங்காடு மற்றும் கோத்தகிரி காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளதாவும்,பழைய குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.