இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை: மிருகவதை சட்ட திருத்த நகலை எரித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை: மிருகவதை சட்ட திருத்த நகலை எரித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கடலூரில் பரபரப்பு
கடலூர்,
இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை விதித்துள்ளதை கண்டித்து கடலூரில், விவசாயிகள், பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், வறட்சியால் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனி, பாஸ்கரன், கடவுள், அரிநாராயணன், வரதராஜன், செல்வராஜ், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்ட நகல் எரிப்புஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாதவன், கடலூர் ஒன்றிய தலைவர் பஞ்சாட்சரம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ரட்சகநாதன், பண்ருட்டி ஒன்றிய பொருளாளர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டன. தொடர்ந்து மிருகவதை தடை சட்ட திருத்த நகலை எரித்து போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய விவசாயிகள் சங்கத்தினர், பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.