சென்டாக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி பேட்டி


சென்டாக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 11:15 PM GMT (Updated: 2017-06-17T02:14:29+05:30)

புதுச்சேரி மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் சென்டாக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இதில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் 4–வது பிரதிவாதியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரம் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் தற்காலிகமாக ரூ.10 லட்சம் கட்டணம் பெற்றுக் கொண்டு வரும் 19–ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும். 20–ம் தேதி அவர்களுக்கு வகுப்புகளை தொடங்க வேண்டும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கவர்னர் மாளிகை தலையிட்டது

புதுச்சேரியில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகி இருந்தனர். சேர்க்கை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐகோர்ட்டில் அவர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைத்த மாணவர்கள், பெற்றோருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் நிலை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியால் கவர்னர் மாளிகை நேராக தலையிட நேரிட்டது.

சென்டாக் கமிட்டியை மாற்ற வேண்டும்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவை இணைந்து ஒரு குழுவை அமைத்து நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் வரை தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை கட்டணமாக பெற்றுக்கொண்டு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. என்னுடைய உத்தரவின்படி தான் கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து 4–வது பிரதிவாதியாக இணைந்து கொண்டார்.

அரசின் செயல்பாடுகளில் வேறுபாடு எழுந்ததால், நானே இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். சென்டாக் அமைப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. புதுவை மாணவர்களின் நலன் காக்கும் வகையில் சென்டாக் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்பட தற்போதுள்ள அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள கமிட்டியை நீக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார். பேட்டியின் போது கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், தனிச் செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘மத்திய அரசின் எந்த நிதியை தடுத்தேன்?’

அமைச்சர்களுக்கு கிரண்பெடி சவால்

கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘புதுவை யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு உள்ள பணி விதிகளின்படி தான் நான் செயல்படுகிறேன். எனது அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என மாநில அரசு விரும்பினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. இதை செய்ய வேண்டியது மத்திய அரசு தான். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றம் தான் முடிவு செய்யும். அனைத்து அதிகாரங்களும் சட்டத்துக்குட்பட்டது தான். விதிகளில் திருத்தம் செய்தால் அதற்கேற்றவாறு செயல்படுவேன்.

நான் மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு வரும் நிதி எதையும் தடுக்கவில்லை. நான் எந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து வந்த நிதியை தடுத்தேன் என்று கூற எந்த அமைச்சராவது தைரியமாக கூற முன்வருவார்களா? இதை சவாலாக விடுக்கிறேன். அந்த கோப்பை காண்பிக்க முடியுமா?’ என்று தெரிவித்தார்.


Next Story