அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம்


அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:22 AM IST (Updated: 17 Jun 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

துவாக்குடியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர்,

திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி.நகரில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. 800–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளியில் தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை கூட கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இதை கண்டித்தும், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தையே வசூலிக்கக்கோரியும், மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என கடந்த 12–ந் தேதி முடிவெடுத்தனர். அதன்படி 13–ந் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ஷோபா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உங்களது கோரிக்கை குறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பார் என்று எடுத்து கூறப்பட்டது. அதனை ஏற்று அன்றையதினம் அனைவரும் கலைந்து சென்றனர்.

உண்ணாவிரதம்

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களில் சிலரை பள்ளி நிர்வாகம் மிரட்டியதாக பெற்றோர்கள் மத்தியில் தகவல் பரவியது. போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை அச்சுறுத்தக்கூடாது, அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பள்ளியின் நுழைவாயிலில் மகேந்திரன், ஜெகநாதன் தலைமையில் பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த துவாக்குடி இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் விமலா, வருவாய் அதிகாரி கீதா, பள்ளி தலைமை ஆசிரியை லூர்து ஆகியோர் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்விக்கட்டணத்தை ரூ.2 ஆயிரத்து 500 குறைத்துக் கொள்வதென்றும், வரும் கல்வி ஆண்டில் புத்தகங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story