மணல் லாரிகளை நிறுத்த இடம் தேர்வு செய்யக்கோரி மறியல் போராட்டம்


மணல் லாரிகளை நிறுத்த இடம் தேர்வு செய்யக்கோரி மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:44 PM GMT (Updated: 2017-06-17T04:14:30+05:30)

மருதூர் பிரிவு சாலை அருகே மணல் லாரிகளை நிறுத்த இடம் தேர்வு செய்யக்கோரி சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை,

மருதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் தலைமையில் மருதூர் பகுதியை சேர்ந்த சிலர் கரூர்- திருச்சி புதிய புறவழி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் பிரிவு சாலை அருகே நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வரைவோலை (டி.டி.) எடுத்துக்கொண்டு லாரியில் மணல் எடுத்துச்செல்ல பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லாரி டிரைவர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெட்டவாய்த்தலையில் மணல் எடுக்கவரும் லாரி டிரைவர்கள் பெட்டவாய்த்தலையில் இருந்து மருதூர் வழியாக குளித்தலை வரை புறவழிச்சாலைகளிலும், கிராம சாலைகளிலும் தங்கள் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் மருதூர் பகுதி பொதுமக்கள் இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த புறவழிச்சாலையை கடந்து சென்று வருகின்றோம். இச்சாலையில் லாரிகளை நிறுத்தியுள்ளதால் நாங்கள் சாலையை கடந்து செல்லமுடியாத நிலைஉள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை மணல் குவாரிக்கு மணல் அள்ள செல்லும் லாரிகள் அனைத்தும் நிற்பதற்கு திருச்சி மாவட்ட பகுதியிலேயே இடத்தை தேர்வு செய்ய அந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடை யூறாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை அப்புறப்படுத்துவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story