கல்வி அதிகாரிகள் ஆய்வு 3 மாணவ–மாணவி, 2 ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை


கல்வி அதிகாரிகள் ஆய்வு 3 மாணவ–மாணவி, 2 ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2017 10:59 PM GMT (Updated: 16 Jun 2017 10:59 PM GMT)

‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக நகரவை தொடக்கப்பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 3 மாணவ–மாணவிகள், 2 ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சேலம்,

சேலம் அரிசிபாளையம் பெருமாள் கோவில் தெருவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் நகரவை தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைவான எண்ணிக்கையில் மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

புனித அந்தோணியார் சிற்றாலயத்திற்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி வாடகை செலுத்த பள்ளி இயங்கி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக வாடகையை ஆலய நிர்வாகம் வாங்க மறுத்ததுடன், பள்ளியை காலி செய்ய சொல்லி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளியில் மின்சார வசதி கிடையாது. சுகாதார வளாகம் இல்லை. இதனால் அரிசிபாளையம் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ–மாணவிகளை சேர்க்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. இந்த பள்ளியில் படித்த மாணவ–மாணவிகளையும் அவர்களது பெற்றோர்கள் அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். இந்த பள்ளியில் 1–ம் வகுப்புக்கு ஒரு மாணவர், 3–ம் வகுப்புக்கு ஒரு மாணவர், 4–ம் வகுப்புக்கு ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் 2 மாணவர்கள் வரவில்லை. ஒரு மாணவி மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தாள். அவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், இன்னொரு ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தனர். இது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி‘யில் புகைப்படத்துடன் வெளியானது.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

அதைத்தொடர்ந்து நேற்று தினத்தந்தியில் வந்த செய்தியுடன் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கே.தங்கவேலு, உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முனியப்பன் ஆகியோர் சென்று மாணவ–மாணவிகளின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தனர். நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 3 பேர் மட்டுமே படிப்பது தெரிந்தது. மேலும் பள்ளியில் மின்சாரம், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாததையும் அவர்கள் அறிந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தங்கவேலு கூறியதாவது:–

மாற்று நடவடிக்கை

சேலம் மாநகரில் பல தொடக்கப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சேலம் அம்மாபேட்டையில் ஒரு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது. அனைத்து தேவைகளையும் பெற்றோரே செய்து கொடுத்துள்ளனர். மாணவர்களுக்கு அங்கு ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. அரிசிபாளையம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள நகரவை தொடக்கப்பள்ளி, கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது. கட்டிடத்திற்கு வாடகை மட்டுமே மாநகராட்சி செலுத்துகிறது. கடந்த ஆண்டு 9 மாணவர்கள் படித்துள்ளனர். தற்போது 3 பேர் மட்டுமே படிக்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக பள்ளியில் அடிப்படை வசதியும் இல்லை. மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியைகள் சென்று கேட்டபோது, பெற்றோர் தரப்பில் ஒத்துழைப்பும் இல்லை. எனவே, இங்கு படிக்கும் 2 மாணவர், ஒரு மாணவியை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கவும், பணியாற்றும் 2 ஆசிரியைகளையும் வேறு பள்ளிக்கு மாற்றவும் முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பாக கல்வித்துறை இணை இயக்குனருக்கு முறைப்படி கடிதம் எழுதி அனுமதி பெற்ற பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு இயங்கி கொண்டிருந்த பள்ளி மூடப்படுவதால், அந்த பகுதி மக்களுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும். சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தொடர்ந்து நடத்தப்பட்டுதான் வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு

புனித அந்தோணியார் சிற்றாலய துணைத்தலைவர் மார்‌ஷல் கூறுகையில்.‘‘கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள பள்ளியில் போதிய மாணவர் வருகை இல்லை என்பதால், அதை காலி செய்துதரக்கோரி மாநகராட்சி கமி‌ஷனரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு ஆலயத்தை விரிவாக்கம் செய்திட இடம் தேவையாக உள்ளது. எங்களால் எந்த வகையில் ஒத்துழைப்பு வழங்க முடியும்? என தெரியவில்லை.‘‘ என்றார்.



Next Story