தர்மபுரி ரூ.49 கோடி முதலீட்டில் தொழில்கள் தொடக்கம்
உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.49 கோடியே 16 லட்சம் முதலீட்டில் தொழில்களை தொடங்கி உள்ளனர் என்று முதலீட்டாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்தமிழகத்தில் கடந்த 2015–ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட தொழில் முதலீட்டாளர்கள் தர்மபுரி மாவட்டத்தில் தொழில்களை தொடங்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான கையேட்டை வெளியிட்டார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு மற்றும் வங்கி மேலாளர்கள், இதர துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–
உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதலீட்டாளர்களில் இதுவரை 55 முதலீட்டாளர்கள் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.49 கோடியே 16 லட்சம் முதலீட்டில் தொழில்களை தொடங்கி உள்ளனர். மேலும் 17 பேர் இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூ.18 கோடியே 69 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளனர். மின் இணைப்பு பெறுதல், வங்கிக்கடன் பெறுதல், தொழில் தொடங்க தேவையான இடவசதி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஒப்புதல்களை பெறுதல் என முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வு கூட்டங்கள்கிராமப்புற பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கிட மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு தொழில்வளாகங்கள் தொடங்கவும், சிப்காட் மற்றும் சிட்கோ மூலம் தொழிற்சாலைகளை விரைவாக தொடங்கவும் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். மாவட்ட தொழில்மையம் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதன்படி நல்லம்பள்ளியில் வருகிற 19–ந்தேதியும், பென்னாகரத்தில் 21–ந்தேதியும் கூட்டம் நடைபெறும். பாலக்கோட்டில் 28–ந்தேதியும், காரிமங்கலத்தில் ஜூலை மாதம் 5–ந்தேதியும், மொரப்பூரில் 10–ந்தேதியும், பாப்பிரெட்டிப்பட்டியில் 12–ந்தேதியும், அரூரில் 19–ந்தேதியும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறும். தர்மபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.