நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த தாமதம் ஏன்? பெண் பயணிகள் கேள்வி


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த  தாமதம் ஏன்? பெண் பயணிகள் கேள்வி
x
தினத்தந்தி 24 Jun 2017 11:15 PM GMT (Updated: 24 Jun 2017 6:13 PM GMT)

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை சம்பவம் நடந்து ஓராண்டு முடிந்து விட்டது. ஆனால் இதுவரை அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தாதது ஏன் என்று பெண் பயணிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி, கடந்த ஆண்டு (2016) ஜூன் 24–ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை முதலில் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரிய சிக்கல் இருந்தது.

காரணம், கொலையாளியை யாரும் பார்க்காததாலும், ரெயில் நிலையத்தில் எந்தவித கண்காணிப்பு கேமரா இல்லாததாலும் போலீசார் திணறினார்கள். அதன்பிறகு, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே இருந்த குடியிருப்புகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை வைத்து கொலையாளியை கண்டுபிடித்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் மின்சார வயரை கடித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அதிகாரிகள் தகவல்

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை கைது செய்வதற்கு, ரெயில் நிலையத்தை ஒட்டி குடியிருப்புகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா தான் முக்கிய தடயமாக இருந்தது.

அதன்பிறகு, இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டுகொள்ளும் வகையிலும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் உள்பட 82 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமதம் ஏன்?

ஆனால் சுவாதி கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த பிறகும் இதுவரை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்க£ணிப்பு கேமரா பொருத்தவில்லை. இது
குறித்து நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் கூறும்போது, ‘பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் நடந்த நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்த தாமதம் ஏன்? பயணிகளின் பாதுகாப்பில் ரெயில்வே நிர்வாகம் ஏன் அலட்சியம் காட்டுகிறது?. உடனே பதற்றமான ரெயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்றனர்.

விரைவில்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. அங்கு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக கேமராவுக்கு தேவையான வயர் பொருத்தப்பட்டுவிட்டது. விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்’ என்றனர்.

Next Story