திரைப்படங்களில் பண்பாட்டை போற்றும் வகையில் பாடல்கள் எழுதவேண்டும் நீதிபதி பேச்சு


திரைப்படங்களில் பண்பாட்டை போற்றும் வகையில் பாடல்கள் எழுதவேண்டும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-25T03:01:03+05:30)

திரைப்படங்களில் பண்பாட்டை போற்றும் வகையில் பாடல்கள் எழுதவேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில், கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வரும், தஞ்சை கவியரசு கண்ணதாசன் பேரவை தலைவருமான டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் முதன்மை விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் உயரிய மொழி என அறியப்பட்டதால் அதற்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. கால ஓட்டத்தில் தமிழ் மொழி எந்த பாதிப்பும் இல்லாமல் தன்னுடைய அடையாளத்தையும் இழக்காமல் நிற்பதால், அதை செம்மொழி என அழைக்கிறோம். இதை அறிவுரைகளாகத் தனது பாடல்கள் மூலம் கூறியவர் கண்ணதாசன். இந்த மண்ணுக்கான சித்தாந்தத்தை நிலை நிறுத்திய மொழி தமிழ். உலக தத்துவவாதிகளுக்கு சித்தாந்தத்தை போதித்த மொழி தமிழ். இந்த பெருமையை திரைப்படப் பாடல்கள் வாயிலாக உடுமலை நாராயணக்கவி, கண்ணதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோர் மக்களிடம் கொண்டு சென்றனர். இவர்களில் தமிழ் இலக்கியச்சிறப்பையும், மேன்மையையும் உள்வாங்கியவர் கண்ணதாசன் என்பதால் அவர் இன்றும் பேசப்படுகிறார். தற்போது, கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக பாடல்கள் வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே திரைப்படங்களில் பண்பாட்டை போற்றும் வகையில் பாடல்கள் எழுதவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இலக்கியங்களை பின்பற்றவேண்டும்

பின்னர் சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பேசுகையில்,

நீதித்துறையில் ஏழை எளிய மக்களுக்கு சட்டங்களை வழங்கி தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது. தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டவை அனைத்தும் சமூகத்தை நெறிப்படுத்துவதுடன் நல்வழிப்படுத்துபவை. அவற்றை நடைமுறைப்படுத்தி வாழ்க்கையில் பின்பற்றவேண்டும். என்னிடம் வந்த பல்வேறு வழக்குகளுக்கு இலக்கியங்களை மேற்கோள்காட்டி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கண்ணதாசன் அவரது கவிதை வரிகளில் ஒரு குடும்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாப நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக செயல்பட எந்த அரசியல்வாதியும் தற்போது இல்லை என்றார்.

முன்னதாக கவிஞர் வல்லம் தாஜ்பால் வரவேற்றார். முடிவில் சி.டி.ராமநாதன் நன்றி கூறினார். இதில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நல்.ராமச்சந்திரன், டாக்டர்கள் மோகன்தாஸ், சரஸ்வதி ராமநாதன் உள்பட வக்கீல்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story