ரஜினி பற்றிய கருத்துக்கு சுப்பிரமணிய சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்


ரஜினி பற்றிய கருத்துக்கு சுப்பிரமணிய சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-25T22:12:00+05:30)

ரஜினி பற்றிய கருத்துக்கு சுப்பிரமணிய சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

ஈரோடு,

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொது செயலாளர் வி.எஸ்.கே.தமிழ்செல்வம் தலைமை தாங்கினார்.

நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில பொதுசெயலாளர் ராம ரவிக்குமார் ஆகியோர் பேசினார்கள்.

ஈரோட்டில் 80 அடி ரோடு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்யவும், பொங்கல் வைக்கவும் அரசு நிலத்தை கோவிலுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கோ‌ஷங்களாக எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி நடிகர் ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் செய்து இருக்கிறார். அந்த விமர்சனங்களுடன் அரசியலில் ஈடுபட கல்வி அறிவு இல்லை என்றும் கூறி உள்ளார்.

அரசியல்வாதியாக இருக்க படிப்பு தேவை இல்லை. நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். தேசப்பற்று இருப்பவர்கள், நியாயமாக இருப்பவர்கள், தியாகம் செய்பவர்கள், மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு பணியாற்றுபவர்கள் அரசியலுக்கு வரலாம். காமராஜர் சிறந்த நிர்வாகத்திறனுடன் ஆட்சி செய்தார்.

எனவே கல்வி என்பது அரசியலுக்கு தேவை என்பது சரியல்ல. மேலும் சுப்பிரமணியசாமி, ரஜினி மீது நிதி மோசடி குறித்த பொய் குற்றச்சாட்டினை வைத்து இருக்கிறார்.

சுப்பிரமணியசாமி ஏற்கனவே ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார். எனவே அவரிடம் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடர வேண்டியதுதானே. அதை விடுத்து ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்கும் வகையில், அவரை மிரட்டும் விதமாக இந்த குற்றச்சாட்டுகளை வைப்பது சரியல்ல. ரஜினி குறித்த கருத்துகளுக்கு சுப்பிரமணியசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரஜினியுடன் நான் பேசிய வரையில் அவர் அரசியலுக்கு வருவார். அவர் எந்த மிரட்டலுக்கும் பயப்படமாட்டார்.

இவ்வாறு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஈரோடு மாநகர் தலைவர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story