சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர் சாவு: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர் சாவு: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:00 PM GMT (Updated: 25 Jun 2017 5:00 PM GMT)

சின்னசேலம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தை சேர்ந்தவர் நல்லபெருமாள் (வயது 47), தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள்(39). இவர்களுக்கு புகழேந்தி(17), பூவரசன்(15) என்ற 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகழேந்தி 12–ம் வகுப்பும், பூவரசன் எஸ்.எஸ்.எல்.சி.யும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு நயினார்பாளையம் பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் நல்லபெருமாள் தனது குடும்பத்துடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து நல்லபெருமாள், பழனியம்மாள், புகழேந்தி, பூவரசன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் பூவரசன் உடல் நசுங்கி இறந்தார். படுகாயம் அடைந்த நல்லபெருமாள் உள்ளிட்ட 3 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

பலியான பூவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு பூவரசனின் உறவினர்கள் நயினார்பாளையத்தில் கடலூர்–ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பலியான பூவரசன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தரமற்ற முறையில் சுற்றுச்சுவர் கட்டிய இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று பூவரசனின் உறவினர்கள் மதியம் 2 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story