ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் மீது தாக்குதல்: சித்தராமையா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?


ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் மீது தாக்குதல்: சித்தராமையா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
x
தினத்தந்தி 25 Jun 2017 9:30 PM GMT (Updated: 25 Jun 2017 6:38 PM GMT)

ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சித்தராமையா, என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? என்று தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

கோலார் தங்கவயல்,

ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சித்தராமையா, என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? என்று தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேவேகவுடா ஆறுதல்

கோலார் நகரசபை 21–வது வார்டு கட்டாரிபாளையாவில் அடுத்த மாதம்(ஜூலை) 2–ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 21–ந் தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து கோலார் போலீஸ் நிலையம் அருகே ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில தொண்டர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு கோலார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்களை நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

குடும்ப அரசியல்

ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. போலீஸ் நிலையம் முன்பு வைத்த இந்த தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது. ஆனாலும் போலீசார் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்து உள்ளனர். மாநிலத்தின் போலீஸ் மந்திரி போல் சித்தராமையா செயல்படுகிறார். இந்த சம்பவத்திற்கு அவர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? எங்கள் கட்சி தொண்டர்களை தாக்கியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க சித்தராமையா உத்தரவிட வேண்டும்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி குடும்ப அரசியல் நடத்துகிறது என்று பா.ஜனதா, காங்கிரசார் கூறி வருகின்றனர். கட்டாரிபாளையாவில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் நானோ, எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களோ வேட்பாளராக நிற்கவில்லை. தொண்டர் ஒருவரை தான் நிறுத்தி உள்ளோம். அப்படி இருக்கும் போது, நாங்கள் குடும்ப அரசியல் நடத்துவதாக கூறியது கண்டிக்கத்தக்கது. எங்கள் கட்சியை பற்றி மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாமி தரிசனம்

இந்த பேட்டியின் போது முன்னாள் மந்திரி சீனிவாசகவுடா, மாவட்ட தலைவர் வெங்கடசிவரெட்டி உள்பட பலர் இருந்தனர். முன்னதாக முல்பாகல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குருடுமலை விநாயகர் கோவிலில் தேவேகவுடா, தனது மனைவி சென்னம்மாவுடன் சாமி தரிசனம் செய்தார்.


Next Story