மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 25 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-26T01:18:52+05:30)

பெரியபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியபாளையம்

பெரியபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ரவி. அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பிரியா (வயது 19). அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது உறவினர் மகனுடன் அருகில் உள்ள கடைக்கு ஜெராக்ஸ் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பிரியா சென்றார். உறவினரின் மகன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பிரியா பின்னால் அமர்ந்து இருந்தார்.

லாரி மோதி சாவு

பெரியபாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, ஆரணியில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியா கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய மாணவி பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story