பலத்த மழை எதிரொலி: தேக்கடி ஏரியில் படகு சவாரி தொடங்கியது

பலத்த மழை எதிரொலியாக தேக்கடி ஏரியில் படகு சவாரி தொடங்கியது.
குமுளி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக தேக்கடி ஏரி உள்ளது. தமிழக–கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள தேக்கடி ஏரிக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு ஏரியில் படகுசவாரி வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் 2 சிறிய படகுகளும், ஒரு பெரிய படகும், மின்சாரத்துறை சார்பில் 2 சிறிய படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து அணைப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர்.
படகு சவாரி தொடக்கம்இந்தநிலையில் கடந்த மாதம் தேக்கடி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் அணையில் உள்ள திட்டுகள், கட்டைகள் வெளியே தெரிந்தன. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த மாதம் 28–ந் தேதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஒரு மாதமாக படகுகள் கரை பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கடந்த 4 நாட்களாக முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேக்கடி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து படகுசவாரி மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 4 சிறிய படகுகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு பிறகு படகு சவாரி தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் நீர்மட்டம் உயர்ந்தவுடன் பெரிய படகு இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






