செங்குன்றத்தில் உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு


செங்குன்றத்தில் உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 July 2017 4:30 AM IST (Updated: 1 July 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த செங்குன்றம் புள்ளிலைன் புதுநகர் 5–வது தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 28). லாரிகளை பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (25). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

விஜய்க்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சில நாட்களாக விஜய், மனைவியை விட்டு பிரிந்து பெரம்பூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். ஐஸ்வர்யா, தனது மகளுடன் புதுநகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

விஜய் பட்டறையில் வேலை செய்து வரும் சோழவரத்தை அடுத்த பண்டிகாவனூர் கிராமத்தை சேர்ந்த அருணுக்கும் (20), ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. விஜய் இல்லாத நேரத்தில் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த விஜய், இருவரையும் கண்காணித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அருணின் மோட்டார் சைக்கிள், ஐஸ்வர்யா வீட்டு வாசலில் நிற்பதை விஜய் கண்டார்.

உடனே தனது உறவினர் முகப்பேர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த வினோத்குமாரை அழைத்துக்கொண்டு அரிவாளுடன் விஜய் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு படுக்கை அறையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த ஐஸ்வர்யாவை அரிவாளால் வெட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருண், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து விஜய், செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மனைவி, கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய விஜய்யை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வினோத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story