தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆசிரியை சாவு உறவினர்கள் முற்றுகை போராட்டம்


தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆசிரியை சாவு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 2 July 2017 3:00 AM IST (Updated: 1 July 2017 6:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியை சாவு

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் ஊர்ஜிதசெல்வம். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 26). இவர் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சம்பந்தமாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நீர்க்கட்டியை அகற்றுவதற்காக என்டோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சண்முகப்பிரியாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை தூத்துக்குடியில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகப்பிரியாவின் உறவினர்கள் மற்றும் வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்டோர் முதலில் சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். டாக்டரின் கவனக்குறைவு காரணமாக தான் சண்முகப்பிரியா இறந்ததாகவும், எனவே டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story