மாதவரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மாதவரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் பூந்தமல்லி மற்றும் பாடி–மணலி 200 அடி சாலையில் இருந்த 2 மதுக்கடைகள் மூடப்பட்டு, அதற்கு பதிலாக மாதவரம் எலிசபெத் நகரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம் அருகருகே 2 மதுக்கடைகளும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளன.
இந்த மதுக்கடைகளுக்கு அருகே அன்னபூர்ணா நகர், காந்தி நகர் உள்பட 10–க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அருகருகே 2 மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவிகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதால் இங்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 2 மதுக்கடைகளையும் மூடக்கோரி மதுக்கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுபற்றி முறையாக டாஸ்மாக் அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்றனர்.
மறுஅறிவிப்பு வரும் வரையில் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடும்படி ஊழியர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து 2 மதுக்கடைகளையும் திறக்காமல் கடை ஊழியர்கள் திரும்பிச்சென்று விட்டனர். தற்காலிகமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






