நூறு நாள் வேலை திட்ட மேற்பார்வையாளரை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்
மேலூர் அருகே நூறு நாள் வேலை திட்ட மேற்பார்வையாளர் அவதூறாக பேசியதை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மேலூர்,
மேலூர் யூனியனில் உள்ள புதுசுக்காம்பட்டியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெண்களுக்கு வேலைகள் வழங்குவதில் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், ஏராளமானவர்களுக்கு வேலை தருவதில்லை என்று புகார் கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலூர் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது ஊருக்கு நேரில் வந்து குறைகள் சரிசெய்யப்படும் என்று நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட மேற்பார்வையாளர் ஜெகநாதன் பேசியதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று (1–ந்தேதி) புதுசுக்காம்பட்டியில் உள்ள நொண்டிக்கோவில் ஊருணியை பெண்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேற்பார்வையாளர் ஜெகநாதன் யாரும் வேலை செய்ய வேண்டாம், அனைவரும் வெளியேறுங்கள் என ஆவேசமாக பேசி, தரக்குறைவாகவும் பேசினாராம். இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதுசுக்காம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலூர்–நத்தம் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. தகவலறிந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், வருவாய் துறையினர் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:– நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை தருவதில் பாகுபாடு காட்டி வருவதும், முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து வேலை திட்ட மேற்பார்வையாளர் ஜெகநாதன் நேற்று நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து, என்னை பற்றி புகார் கூறிய நீங்கள் வேலை செய்யக் கூடாது. என்னிடம் சம்பளம் வாங்கும் அடிமைகளான நீங்கள் என் மீது புகார் செய்கிறீர்கள். யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வேலைக்கான அடையாள அட்டைகள் என்னிடம் உள்ளது, அதை அனைத்தையும் கிழித்து விடுவேன் என்று ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசுகிறார். இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து, நடந்தவற்றை புகராக கொடுக்குமாறும், அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.