குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சிறுபத்தூர் ஊராட்சியை சேர்ந்த மேற்கு சாலைப்பட்டி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மேலும் சிறிய தொட்டியும், 2 அடிகுழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் அடிகுழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வினியோகிக்கப்படும் குடிநீர், வீட்டில் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் உள்ளதால், மற்றவர்கள் குடிநீர் பிடிக்க முடிவதில்லை எனவும், குறிப்பாக மேற்கு தெருவில் உள்ளவர்களுக்கு வீட்டு இணைப்புகள் இல்லாததால் ஒரு நாளைக்கு 2 குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஆகவே, மேற்கு சாலைப்பட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மண்ணச்ச நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சுவாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி, வீட்டு இணைப்புகளை முறைப்படுத்தி அனைவருக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறியதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story