கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது
திருத்தங்கல் அருகே கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது
திருத்தங்கல்,
சாத்தூர் அருகேயுள்ள சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் அதே ஊரைச்சேர்ந்த மோகனபிரபா என்பவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இருவரும் திருத்தங்கல் ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவியை விட்டு கருப்பசாமி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம்(ஜூன்)10–ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் மோகன்பிரபா இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணையை தீவிரப்படுத்தினார்.அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ஒரு நபருடன் பேசிவந்திருப்பது தெரியவந்தது. அது அதேபகுதியை சேர்ந்த செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன்(30) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்செந்தூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தார்கள்.
விசாரணையில் அவருக்கும் மோகனபிரபாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததும் ஆனால் மோகனபிரபா வேறு சிலருடன் பழகி வந்ததால் வீட்டில் தனியாக இருந்த அவரை, தலையணையால் அழுத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது.