கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரெயில்கள், ரெயில் நிலையங்களில் குற்றங்கள் அதிகரிப்பு
மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் மின்சார ரெயில் சேவையை வழங்கி வருகின்றன. மின்சார ரெயில் சேவைகள் மும்பைவாசிகளின் போக்குவரத்து உயிர்நாடி என வர்ணிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில்
அந்த அளவிற்கு மின்சார ரெயில் சேவைகள் மும்பைவாசிகளின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து உள்ளன. சில நிமிட ரெயில் சேவை பாதிப்பால் கூட நகர மக்கள் ஸ்தம்பித்து போய் விடுவார்கள். அத்தகைய இன்றியமையாத இடத்தை மும்பையில் மின்சார ரெயில் சேவை பிடித்து இருக்கிறது. மத்திய ரெயில்வே சார்பில் 3 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.டி. முதல் கல்யாண், டிட்வாலா, கசாரா, அம்பர்நாத், பத்லாப்பூர், கர்ஜத், கோபோலி வரையிலும், துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்டி. முதல் பன்வெல், அந்தேரி வரையிலும், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே– பன்வெல் இடையேயும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவைகளை தினசரி சுமார் 45 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் முதல் போரிவிலி, பயந்தர், வசாய், விரார், தகானு வரையிலும் இயக்கப்படுகின்றன. இந்த சேவைகளை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இது தவிர இரு ரெயில்வேக்கள் சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களுக்கு நீண்ட தூர ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே நீண்ட தூர ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
திருட்டு சம்பவங்கள்இப்படி லட்சணக்கான பயணிகள் மும்பை ரெயில் நிலையங்கள், மின்சார ரெயில்கள், நீண்ட தூர ரெயில்களில் பயணிகளின் உடைமைகளுக்கு சரியான பாதுகாப்பு இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பயணிகளின் ஒரே பதிலாக இருக்கிறது.
கால் வைக்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் இருக்கும் மின்சார ரெயில்களில் சற்று அயர்ந்தாலும் உடைமைகள் பறிபோய் விடும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன.
ஏனெனில் பயணிகளோடு, பயணிகளாக திருட்டு ஆசாமிகளும் பயணிக்கிறார்கள். ரெயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டு கம்பால் வாசற்படியில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களை தாக்கி செல்போன்களை பறிப்பது, தனியாக பயணிக்கும் பெண்களை மிரட்டி நகை, பணத்தை பறிப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. ரெயில் நிலைய பிளாட்பாரங்களிலும் திருட்டு ஆசாமிகள் துணிகரமாக தங்களது கைவரிசை காட்டி விடுகிறார்கள்.
குற்றங்கள் குறையவில்லைகடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணத்திற்காக துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதுமட்டுமின்றி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணிகள் மானபங்கத்திற்கு உள்ளாவது போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் துணிகரமாக நடக்கின்றன.
பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர ரெயில்களிலும், ரெயில் நிலைய பிளாட்பாரங்களிலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சிறப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயினும் ரெயில் பயணிகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் குறைந்ததாக தெரியவில்லை.
இது ஏன்? ரெயில்வே பொருட்களுக்கே பாதுகாப்பு இருப்பதில்லை. சிக்னல் பெட்டியை உடைத்து திருடுவதும், ரெயில் கழிவறை கோப்பை கொள்ளை போன சம்பவங்களும் மும்பையில் நடந்து உள்ளன.
2¼ கோடி பொருட்கள் திருட்டுஇந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான 5 மாத காலக்கட்டத்தில் மட்டும் மேற்கு ரெயில்வே ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் திருட்டு போயுள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக 905 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
‘ரெயில் பயணிகளிடம் அதிகளவில் செல்போன்கள் தான் திருடப்படுகின்றன. போரிவிலி, அந்தேரி மற்றும் வசாய்– நாலச்சோப்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையில் தான் ரெயில்களில் அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு ரெயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து தான் வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருட்டு ஆசாமிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமராஇதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பை நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும். பயணிகளின் வசதிக்காக அதிக மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுவதும் இங்கு தான். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி சுமுகமாக பயணிகள் செல்வதற்கு வசதியாக மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஏனெனில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தான் அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.
ரெயில் நிலையங்களில் குற்றச்சம்பவங்கள் நடக்காத வண்ணம் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மட்டுமின்றி அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
இதன் மூலம் ரெயில்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். நீண்ட தூர ரெயில்களில் பயணிகள் பாதுகாப்பிற்காக போதிய போலீசார் இருப்பதில்லை. இரவு நேரங்களில் கண்டிப்பாக போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும்’’ என்றார்.