அடிப்படை வசதிகள் கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
அடிப்படை வசதிகள் கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள தம்பம்பதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சப்–கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
தம்பம்பதியில் சுமார் 300–க்கும் மேற்பட்டர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் தற்போது 25 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் வசித்து வருகின்றனர். மேலும் இங்கிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய உள்ளது. தண்ணீர் எடுத்து வரும் பாதை கரடுமேடாக உள்ளதால், பெண்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
மலை பகுதி அருகில் அமைந்திருப்பதால் யானை, சிறுத்தை, பாம்பு போன்றவை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர பயமாக உள்ளது. இதனால் இங்கு வசித்து வருபவர்கள் வெளியேறும் நிலை உள்ளது. எனவே சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆழியாறு புளியகண்டியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
ஆழியாறு அணையை தூர்வாரப்பட்டு லாரிகள், டிராக்டர்களின் மணல் கொண்டு செல்வதால் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி விட்டது. எனவே புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பேரூராட்சி மூலம் அறிவிக்கப்பட்ட ரேஷன் கடை, குடிநீர், மின் வசதி, சாக்கடை கால்வாய் வசதி மற்றும் பொது கழிப்பறை போன்ற பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
த.மா.கா. கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பொள்ளாச்சி– கோவை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 500 கோடி ஒதுக்கப்பட்டு 27.3 கிலோ மீட்டர் தூரத்து சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் மயிலேரிபாளையம் பகுதியில் சுங்கசாவடி அமைக்க ஆய்த்த பணிகள் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவை சுற்றி உள்ள கிராமங்கள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சுங்கசாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பது விவசாயிகளுக்கு சுமையாக உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குனரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி விவசாயிகளின் பொதுமக்கள் நலன் கருதி சுங்கசாவடி அமைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
குறைதீர்க்கும் முகாமில் ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாசிலாமணி என்பவர் சக்கர நாற்காலி கேட்டு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பரீசிலனை செய்த சப்–கலெக்டர் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சப்–கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 2 சக்கர நாற்காலியை முகாமிலேயே வழங்கினார்.
இதேபோன்று 3 பேருக்கு சக்கர நாற்காலிகளை சப்–கலெக்டர் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கி சப்–கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.