காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தால் தென்னை விவசாயிகள் கவலை
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தால் தென்னை விவசாயிகள் கவலை
கூடலூர்,
கூடலூர்– முதுமலை புலிகள் காப்பக எல்லையில் தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல், புத்தூர்வயல், அள்ளூர்வயல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் செழித்து வளர்ந்துள்ளதால் காட்டு யானைகள், மான்களுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் மாலை நேரம் ஆனதும் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
பின்னர் அங்குள்ள வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை விடிய, விடிய முகாமிட்டு தின்று வருகிறது. காட்டு யானைகளின் தொடர் வருகையால் கிராமப்புற விவசாயிகள், பொதுமக்கள் தினமும் அச்சமுடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாய பயிர்களும் சேதம் அடைந்து வருகிறது. இதனால் காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இதையொட்டி போலீசார், வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகளை விரட்டும் பணி சில தினங்களாக நடைபெற்று வந்தது. இருப்பினும் காட்டு யானைகள் வருகையை வனத்துறையால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் தினமும் கிராமங்களுக்குள் நுழைந்து தென்னை, பாக்கு மரங்களை வேரோடு சரித்து போட்டு தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. நள்ளிரவு என்பதால் விவசாயிகள் காட்டுயானைகளை விரட்ட முடியாமலும் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகபட்சமாக தென்னை மரங்களை விவசாயிகள் இழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே காட்டுயானையால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக முதுமலை வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என விவசாயிகள், கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:–
காட்டு யானைகள் சில தினங்கள் வந்து பயிர்களை தின்று விட்டு செல்கிறது என்றால் பொறுத்து கொள்ளலாம். ஆனால் மாதக்கணக்கில் தினமும் இரவில் வந்து தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை வேரோடு பிடுங்கி தின்று வருகிறது. சில ஆண்டுகள் பராமரித்து பயனடையும் சமயத்தில் காட்டு யானைகள் தென்னை மரங்களை தின்று விடுகிறது.
இப்பகுதியில் காட்டு யானைகளால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையிடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறைக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனிடையே காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.