இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது: பொய்வழக்கு போடப்பட்டதாக கலெக்டரிடம் தந்தை புகார்
பள்ளிவாசல் மீது கல்வீசியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது பொய்வழக்கு போடப்பட்டதாக, கலெக்டரிடம் தந்தை புகார்
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேடப்பட்டியில் உள்ள பள்ளிவாசல் மீது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கல்வீசினர். இதில், பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக பள்ளிவாசல் ஜமாத்தார்கள் திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், பள்ளிவாசல் மீது கல்வீசியதாக இந்து மக்கள் கட்சியின் மதுரை மண்டல தலைவர் தர்மா என்ற தர்மராஜா (வயது 38), அவருடைய தம்பியும் மாவட்ட தலைவருமான செந்தில்வேல் (32) ஆகியோரை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, நேற்று திண்டுக்கல் இந்திராகாந்தி நகரில் வசித்து வரும் தர்மாவின் தந்தை வேலு தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் டி.ஜி.வினயை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனது மகன்களான தர்மா, செந்தில்வேல் ஆகியோர் பள்ளிவாசல் மீது கல்வீசியதாக கூறி பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதுகுறித்து தெற்கு போலீசாரிடம் கேட்டபோது, இந்து இயக்கத்தில் இருந்தால் உங்கள் குடும்பத்தினர் அனைவர் மீதும் பொய்வழக்கு போடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே எனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 100 பேர் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிடுகிறோம். எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.