காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சுகள் கவனக்குறைவால் தாய்–மகன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் கவனக்குறைவால் தாய்–மகன் உயிரிழந்தனர். இதனையடுத்து நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வடஆளபிறந்தான் புதூர் பகுதியில் வசிப்பவர் வேலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவானி (வயது 25). நிறைமாத கர்ப்பிணி.
பவானி பிரசவ வலியால் துடித்ததையடுத்து கடந்த மாதம் (ஜூன்) 26–ந்தேதி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மறுநாள் இரவு பவானிக்கு பிரசவ வலி அதிகமானது. ஆனால் அப்போது டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆபத்தான நிலையில் இருந்த பவானியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கடந்த 1–ந்தேதி அந்த குழந்தை இறந்து விட்டது. நேற்று முன்தினம் தாய் பவானியும் உயிரிழந்தார். தாய் – மகன் இறப்புக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சுகளின் கவனக்குறைவே காரணம் என்றும், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து இருந்தால் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதனையடுத்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குநர் சுந்தரராஜிடம் டாக்டர், நர்சுகள் மீது புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி விசாரணை செய்வதாக உறுதி அளித்தார்.