தி.மு.க.-அ.தி.மு.க.வுடன் எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது டாக்டர் ராமதாஸ் பேச்சு


தி.மு.க.-அ.தி.மு.க.வுடன் எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 4 July 2017 4:45 AM IST (Updated: 4 July 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.-அ.தி.மு.க. வுடன் எந்த சூழலிலும் கூட்டணி வைக்கமாட்டோம் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பெரம்பலூர்,

“கழகத்தின் கதை” என்ற பெயரில் அ.தி.மு.க.வின் தொடக்க காலம் முதல் இன்று வரை உள்ள செயல்பாடுகள் பற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழா பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது.

மாநில துணை பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் “கழகத்தின் கதை” புத்தகத்தை வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வெளியிட்டார். மாநில துணை தலைவர் திலகபாமா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.


தமிழகத்தில் ஏன் பிறந்தோம் என மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சர்களே ஒருவரையொருவர் குறைகூறி சண்டையிட்டு கொள்வது வேதனையளிக்கிறது. அ.தி.மு.க.வின் மற்றொரு முகத்தை பற்றி முகநூலில் தான் முதலில் எழுதினேன். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே அதனை ஒரு புத்தகமாக எழுதினேன்.

50 வயதுக்கு மேற்பட்டோருக்கு அ.தி.மு.க.வின் தொடக்க காலம் முதல் இன்று வரை தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்போதைய இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதினேன். மாறாக அரசியல் ஆதாயத்திற்காக இதனை செய்யவில்லை.

இதேபோல் எதிர்காலத்தில் தி.மு.க.வின் மற்றொரு பக்கம் பற்றியும் நூல் எழுதுமாறு கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே இலவசங்களை வாரி இறைத்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளன. எந்த சூழலிலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் நாங்கள் (பா.ம.க.) கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஊடகத்தோடு மட்டும் தான் எங்கள் கூட்டணி. ஊடகமும் - அரசியலும் என்கிற பெயரில் சென்னையில் பசுமை தாயகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது.

மது, ஊழல், நிர்வாக திறமையின்மை ஆகியவை இந்த அரசின் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் இறந்த போது, அவரது வங்கி கணக்கில் ரூ.100 தான் இருந்தது. ஆனால் தற்போது அமைச்சர்களே கோடிக்கணக்கில் ஊழல் செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தற்போது மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் சக்தியாக பா.ம.க. உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உள்பட பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story