சரக்கு, சேவை வரி 28 சதவீதம் விதிப்பு: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி விட்டது


சரக்கு, சேவை வரி 28 சதவீதம் விதிப்பு: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி விட்டது
x
தினத்தந்தி 5 July 2017 3:30 AM IST (Updated: 5 July 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு, சேவை வரி 28 சதவீதம் விதிப்பு: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி விட்டது காங்கிரஸ் தேசிய செயலாளர் மாணிக்கம்தாகூர் பேட்டி

விருதுநகர்,

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:–

மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக விவசாய பணிகள் ஏதும் நடைபெறாத நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாகும். பட்டாசு தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேரும், தீப்பெட்டி தொழில் மூலம் 3 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் ஏழை, எளிய மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

தீப்பெட்டி தொழிலில் 50 சதவீதத்துக்கு மேல் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசு தொழிலுக்கு ஏற்கனவே மாநில அரசு 14½ சதவீதம் மதிப்பு கூடுதல் வரி விதித்து வந்தது. சுங்கவரி மத்திய அரசால் 12½ சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சரக்கு, சேவை வரி விதிப்பின்படி பட்டாசு தொழிலுக்கு 28 சதவீதமும், தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 60–க்கும் குறைவான ஆலைகளே சுங்கவரி செலுத்தி வந்தன. தீப்பெட்டி தொழிலை பொறுத்தமட்டில் சிறு தீப்பெட்டி தொழிலுக்கு 6 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது பெரும்பாலான தீப்பெட்டி ஆலைகள் பகுதியாக எந்திரமயமாக்கப்பட்டு உள்ளதால் அவைகள் 18 சதவீத வரி செலுத்த வேண்டி உள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றி ஆலோசனை நடத்தியபோது அதிகபட்சமாக 18 சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு 28 சதவீத வரியை விதித்துள்ளது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்படும். இதனால் பட்டாசு உற்பத்தி பாதிப்பதோடு, சீன பட்டாசுகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கான சரக்கு, சேவை வரி விகிதத்தை மத்திய அரசு 5 சதவீதம் அளவுக்கு குறைத்து இத்தொழில்கள் வழக்கம்போல் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை தருவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் இத்தொழில்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story